உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பாக பணியாற்றியமைக்காக தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தருமபுரி பகுதியில் வீடுகளில் நகைகளை திருடிய கொள்ளையன் கைது

Published On 2023-05-10 08:37 GMT   |   Update On 2023-05-10 08:37 GMT
  • தருமபுரி டவுன் பஸ் நிலையம் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
  • கைதான கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி நகர போலீஸ் எல்லைக்குட்பட்ட குமாரசாமிப்பேட்டை, குள்ளனூர், கோவிந்தசாமி கவுண்டர் தெரு, ஏ.கொல்லஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கதவை உடைத்து தங்க நகைகள் மட்டும் திருட்டு போனது.

இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும் செல்போன் தகவல்கள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். 4 திருட்டு சம்பவங்களும் ஒரே மாதிரி இருப்பதால் அதன் அடிப்படையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் மட்டுமே என்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கண்காணித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து தருமபுரி டவுன் பஸ் நிலையம் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவனிடம் மேற்க்கொ ண்ட விசாரணையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கார்த்திக் (வயது29) என்பதும், தருமபுரி பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், புழல் சிறையிலிருந்து கடந்த 3-ம் தேதி ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது.

மேலும் கார்த்திக் மீது சென்னை மாநகரத்தில் 35-க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் இருப்பதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனிடமிருந்து தருமபுரி பகுதியில் திருடிய 37 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் திருட்டு சம்பவ ங்களுக்கு பயன்படுத்தி பல்சர் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இதையடுத்து கைதான கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டி வெகுமதி வழங்கினார். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News