உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடைகளில் ஒரே நாளில் ஒரு டன் தக்காளி விற்பனை

Published On 2023-08-02 09:51 GMT   |   Update On 2023-08-02 09:51 GMT
  • உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
  • இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட் களுக்கு வீரபாண்டி, தலைவாசல், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மன்னார் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.

இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வட மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்ததால் அங்கு இருந்தும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ 200 வரை விற்கப்பட்டது.

சேலம் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 160 ரூபாய் வரை உழவர் சந்தைகளில் அதிகபட்சமாக 135 வரையும் தக்காளி விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி செல்கிறார்கள் சிலர் தக்காளி வாங்குவது இல்லை.

இந்த விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகரில் 20 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது .

ஒரே நாளில் இந்த ரேஷன் கடைகள் மூலம் ஒரு டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி ஒரு டன் தக்காளி விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார். 2-வது நாளாக இன்றும் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News