உள்ளூர் செய்திகள்

சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் இரட்டை குழந்தைகள் பெற்ற தாய் திடீர் சாவு

Published On 2023-05-17 09:25 GMT   |   Update On 2023-05-17 09:25 GMT
  • நிறை மாத கர்ப்பிணியான பிரேமாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • இதனை தொடர்ந்து 3-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பிரேமாவிற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா.

இரட்டை குழந்தை

நிறை மாத கர்ப்பிணியான பிரேமாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த 2-ந் தேதி சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 3-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பிரேமாவிற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு திரும்பினார்.

தொடர்ந்து பிரேமா வலியால் மிகவும் அவதியுற்று வந்தார். இதனால் சாப்பிட கூட முடியாத சூழல் நிலவியது. இதனால் கடந்த 14-ந் தேதி மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் பெண்ணின் இறப்பு குறித்து சரிவர காரணம் கூறாததால் வேதனை அடைந்த உறவினர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் பிரேமா உயிரிழந்துள்ளார். தற்போது இரட்டை குழந்தைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News