கடலூர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு முன் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீர்: கர்ப்பிணிகள் அதிர்ச்சி
- நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர்.
- தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது.
கடலூர்:
கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அறுவை சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர். இதனால் மகப்பேறு பிரிவிற்குள் செருப்புகள் அணிந்து செல்லாத வகையில் மிக பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் மகப்பேறு பிரிவு முன்பு உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி தற்போது மகப்பேறு பிரிவு முன்பு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக மகப்பேறு பிரிவு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு இதனை பார்த்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொசு உற்பத்தி பெருகி பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயமும் நிலவி வருகிறது.
இது மட்டுமின்றி புதிதாக பிறந்துள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கழிவு நீர் வெளியேறி உள்ளதால் பல்வேறு தொற்று நோய் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பொதுவெளியில் இது போன்ற நிலைபாடு இல்லாத வகையில் அந்தந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மிகவும் பாதுகாப்பாக இருக்க கூடிய மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தை சமூக அலுவலர்கள் கண்டித்து உள்ளனர்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இது போன்ற அவல நிலை வருங்காலங்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.