உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்

Published On 2022-09-02 08:50 GMT   |   Update On 2022-09-02 08:50 GMT
  • சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடந்த இருதரப்பினர் மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இறந்தவரின் உடலுக்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (56). இவர் கடந்த 25-ந் தேதி மருதிப்பட்டியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

அவர் மீது மோதிய சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் பிரபு என்பவரும் காயமடைந்ததால் இருவரையும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டியை, மனைவி பாண்டியம்மாள் பாதி சிகிச்சை நிலையில் வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்த முனியாண்டி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டில் முனியாண்டியின் உடலுக்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. முனியாண்டியின் இறப்பு குறித்து தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மதுபோதையில் அங்கு வந்த முனியாண்டி மற்றும் பாண்டியம்மாளின் உறவினர்கள் அரசு மருந்துவமனை வளாகத்தின் உள்பகுதியில் கல்லால் எறிந்தும், கட்டை, கம்புகளுடனும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சிங்கம்புணரி போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதில் காரைக்குடி ஓ.சிறுவயல் பகுதியை சுரேஷ் (35), கருத்த பாண்டி, வல்லரசு, கண்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் சுரேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவர்களைத் தாக்கியதாக விராலிமலையைச் சேர்ந்த முத்து, கண்ணன், சக்திவேல் கருப்பையா, ஆனந்த், சேகர், சிவா, விஜய், பாரதி மற்றும் ஆறுமுகம் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிங்கம்புணரி போலீசார் அவர்களை கைது செய்து ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இறந்த உறவினர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வந்த இடத்தில் மது போதையால் இருதரப்பாக மோதி அரசு மருத்துவமனையை போர் களமாக மாற்றிய இந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News