புதிய நியாய விலைக்கடைகள் திறந்து வைத்த அமைச்சர்
- சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
- கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
சிவகங்கை
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.