- சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் பேசும்போது, ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. எனவே அந்த துறை சார்ந்த நலத்திட்டங்கள் என்ன? அரசு அறிவித்த திட்டங்கள் எவை? என்று எங்களுக்கு தெரியாததால் எங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவரின் கேள்விக்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜா, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை இனிவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என கூறினார்.
முடிவில் மேலாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.