உள்ளூர் செய்திகள்

சேலத்தில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம்

Published On 2023-01-27 10:16 GMT   |   Update On 2023-01-27 10:16 GMT
  • கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்தது.
  • பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம்:

தமிழகம் முழுவதும் பரவலாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்தது. இதனால் அப்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 வரை விலை உயர்ந்தது.

இதையடுத்து கடந்த டிசம்பரில் விவசாயிகள் அதிகளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது பல இடங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரிதுள்ளதால் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சின்ன வெங்காயம் வியாபாரிகள் கூறுகையில், "கடந்த இரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயம்" கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு சின்னவெங்காயம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட 40 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் ரூ.40 முதல் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

Similar News