உள்ளூர் செய்திகள்

குளத்தில் மண் திருடியதாக பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது வழக்கு

Published On 2024-09-12 09:22 GMT   |   Update On 2024-09-12 09:22 GMT
  • தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
  • மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறையை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன் (வயது 45). இவரது மனைவி இந்திரா. இவர் இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் முருகேசன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று அள்ளி வந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய குளத்தில் மட்டு மல்லாது, அரசு விதிகளை மீறி அந்த குளத்தின் அருகே இருந்த சங்கனேரி குளத்திலும் திருட்டுத்தனமாக அவர் மண் எடுப்பதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட குளத்திற்கு சென்று மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குளத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளப்பட்டது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.

தொடர்ந்து அங்கு மண் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்த தனராஜ், ஆனந்தகுமார் என்ற 2 டிரைவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேசன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் மண் திருட்டு வழக்குப்பதிவு செய்து தனராஜ், ஆனந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News