தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கியது- தென்மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
- கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
நெல்லை:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இதனால் கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களான நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.