நீலகிரியில் குரூப் 4 தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
- 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இருந்து குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களில் மொத்தம் 11,151 பேர் குரூப்-4 தேர்வில் பங்கேற்க உள்ளனர். 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை வட்டாட்சியர் நிலையில் மொத்தம் 21 மொபைல் யூனிட் உட்பட 40 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தேர்வுக்கு செல்வதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணியில் இருந்தும், பந்தலூர் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணியில் இருந்தும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பார்வையற்ற தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.