அனந்தபுரி உள்பட சில ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி
- பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது.
- ‘டிரிசர்வ்டு’ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
செங்கோட்டை:
ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் 'டிரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரெயிலில் (16723) அக்டோபர் 19-ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ்11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் நெல்லை- கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரெயிலில் (16724) அக்டோபர் 20-ந் தேதி முதல் எஸ்11 என்ற பெட்டி கொல்லம்-நெல்லை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும்.
மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரெயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24-ந் தேதி முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 -ந் தேதி முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரெயிலில் (16235) அக்டோபர் 28 -ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.
இந்த 'டிரிசர்வ்டு'ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூ.70, முன்பதிவு கட்டணம் ரூ.145, டிரிசர்வ்டு கட்டணம் ரூ.110 என வரையறுக்கப்பட்டுள்ளது.