திண்டுக்கல் அருகே பள்ளி நேரத்தில் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தவிப்பு
- திண்டுக்கல்லில் இருந்து ஜம்புளியம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை வழியாக மணியகாரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
- கடந்த ஒரு மாதமாக பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி திண்டுக்கல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் இருந்து ஜம்புளியம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை வழியாக மணியகாரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேபஸ் மாலை 5 மணிக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இதன்மூலம் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், மாலையில் வீட்டிற்கு திரும்பவும் சிரமம் இன்றி பயணித்து வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக இந்த பஸ் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது. வி.டி.பட்டியில் ஆரம்பபள்ளி மட்டுமே உள்ளது. சிலுவத்தூரில் உயர்நிலைப்பள்ளியும், கம்பிளியம்பட்டியில் மேல்நிலைபள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கு வருவதற்கு மாணவர்கள் இந்த அரசு பஸ்சையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி திண்டுக்கல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்டோவில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யமுடியாத பல மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.
இதனால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு வழக்கம்போல் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கவேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.