செங்கோட்டை அருகே மேக்கரை வனப்பகுதியில் 'திடீர்' காட்டு தீ; 2-வது நாளாக பற்றி எரிகிறது
- மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீப்பற்றியது.
- 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
செங்கோட்டை:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் சூழலில் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகிறது.
2-வது நாளாக தீ
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேக்கரையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் மேக்கரையை ஒட்டி உள்ள எருமை சாவடி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தற்போது தீ தொடர்ந்து பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மழை இன்றி வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு செல்வோர் தீ எளிமையாக பற்றும் வகையில் எந்த பொருளையும் எடுத்து ெசல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதிகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.