உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி 2 பேர் போராட்டம்
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காக்காப்பாளையம்:
இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.
இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.
இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.