காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2159 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 17 லட்சத்து 86 ஆயிரத்து 973 (94.6 சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை 15 லட்சத்து 27 ஆயிரத்து 565 (80.9 சதவீதம்) பேருக்கும் என மொத்தம் 33 லட்சத்து14 ஆயிரத்து 538 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று மாவட்டத்தில் மொத்தம் 1100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்எச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.