உள்ளூர் செய்திகள் (District)

பிரபல ரவுடி தாடி அய்யனார் தப்பி ஓட்டம்- கூட்டாளிகள் 5 பேர் சுற்றி வளைப்பு

Published On 2024-03-13 06:28 GMT   |   Update On 2024-03-13 06:28 GMT
  • பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் எல்லையில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்ட மற்றும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை ஈடுபட்டு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் வீடுகளுக்கு சென்று கடும் எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.

பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதையொட்டி கடலூர் மாவட்ட போலீசார் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுக்கடை சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் இருந்ததை பார்த்த போலீசார் அவர்களைப் பிடிக்க சென்றனர்.


அப்போது ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 5 நபர்களை சுற்றி வளைத்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 25), கவியரசன் (30), புதுக்கடை சேர்ந்த வேல்முருகன் (27), சந்தோஷ் (21), கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 32) என்பது தெரியவந்தது.

மேலும், தப்பியோடியது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கத்தி, 2 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டியதாக தெரியவந்தது. இது மட்டுமன்றி இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பிரபல ரவுடி தாடி அய்யனாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News