திருவண்ணாமலை விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான பரிதாபம்: உருக்கமான தகவல்கள்
- ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர்.
- விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி சென்ற காரும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.
நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் காமராஜ் (29) கார் டிரைவர் ஆவார்.
அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (37) மாரடைப்பால் உயிர் இழந்தார். அதே போல விபத்தில் பலியான புனித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார். அவரும் டிரைவர் ஆவார்.
இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நராயண் சேத்தி (35), அசாம் மாநிலத்தை சேர்ந்த குஞ்சா ராய் (24), நிக்லேஷ் (25), தாலு (26), விமல் (47) ஆகிய 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அட்டை பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்ய கூடிய அந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
அங்கு 15 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.