உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டியில் வாகன சோதனையில் ரூ.81 ஆயிரம் பறிமுதல்

Published On 2024-04-08 04:07 GMT   |   Update On 2024-04-08 04:07 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

பண்ருட்டி:

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமிரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி-கடலூர் சாலை திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீஸ்காரர்கள் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.88 ஆயிரத்து 100 எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவதிகை கண்ணகி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பண்ருட்டி தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News