உள்ளூர் செய்திகள்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு 5 லட்சம் பேரை திரட்ட முடிவு- சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2023-08-04 05:45 GMT   |   Update On 2023-08-04 05:45 GMT
  • மதுரை அ.தி.மு.க. மாநாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பிரமாண்டமாக நடத்தி காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக இருக்கிறார்.
  • மாநாட்டு பணிகள் அனைத்தும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சர்ச்சைகள் ஏற்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து விதமான சவால்களையும் கோர்ட்டு ரீதியாகவும், தேர்தல் ஆணையம் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமி முறியடித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அ.தி.மு.க. மீண்டும் வலுவாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனுடன் கை கோர்த்து உள்ளார். இதனால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு சற்று பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை முறியடித்து அ.தி.மு.க. ஓரணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

அதன்படி மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த மாநாட்டுக்கு "வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மதுரை அ.தி.மு.க. மாநாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பிரமாண்டமாக நடத்தி காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக இருக்கிறார். இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் அவர் கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

மாநாட்டு பணிகள் அனைத்தும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ஒன்றியங்களிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர்.

மாநாடு ஏற்பாடுகள் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கி மாநாட்டுக்கான இறுதி வடிவங்கள் கொடுப்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் பேசினார்.

ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகியும் மாநாட்டுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினார். மாநாட்டுக்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 லட்சம் பேரை திரட்டினால் அ.தி.மு.க.வின் பலத்தை அனைத்து கட்சிகளுக்கும் உணர்த்தும் வகையில் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அ.தி.மு.க. பொன்விழா மாநாடு என்பதால் தோழமை கட்சியான பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான தி.மு.க. இரண்டுக்கும் சவால் விடும் வகையில் அனைத்து வகையிலும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வை புத்துணர்ச்சியுடன் தயார்படுத்தவும் பொன்விழா எழுச்சி மாநாடு கைகொடுக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள். எனவே அ.தி.மு.க. மாநாடு அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மதுரைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ்கள், வேன்கள் மற்றும் வாகனங்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கில் வரும் வாகனங்களை மாவட்ட வாரியாக எங்கெங்கு நிறுத்துவது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்றை மதுரைக்கு இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறப்பு ரெயில் வருகிற 18-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்.

12 பெட்டிகளுடன் இயக்கப்படும் அந்த சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் இருந்து மதுரை செல்ல உள்ளனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரைக்கு வரும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க அ.தி.மு.க. சார்பில் தென்னக ரெயில்வேக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வினர் மிக எளிதாக மதுரை வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநாட்டுக்கு கூட்டணி கட்சியினரை அழைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி இன்னும் முடிவு செய்யவில்லை. இன்று நடந்த கூட்டத்தில் அதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.

மதுரை செல்லும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்கள், சிறிய ரக ஓட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், லாட்ஜுகள், தனியார் பண்ணை வீடுகள் மற்றும் தனியார் வாடகை கட்டிடங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மதுரையில் உள்ள லாட்ஜுகள், விடுதிகளில் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. இது தவிர அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மதுரையில் 10 இடங்களில் உணவு மையங்கள் அமைத்து 3 நேர சாப்பாடு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்ட தொண்டர்கள் எந்தெந்த உணவு மையங்களில் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் வரையறுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இது பற்றி முழு விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

இத்தகைய ஏற்பாடுகள் மூலம் மதுரை அ.தி.மு.க. மாநாடு உண்மையிலேயே வீரவரலாற்றின் எழுச்சியை நிஜமாக்கும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News