உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவரை கொன்ற அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி கைது- போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-10-30 06:57 GMT   |   Update On 2022-10-30 06:57 GMT
  • புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
  • மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்னராசுவின் மனைவி கலைச்செல்வி நோய் வாய்ப்பட்டு இறந்தார்.

இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) என்பவரின் மனைவி கிருஷ்ணவேனியுடன் சின்னராசுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நளராஜா கடந்த ஜனவரி மாதம் காந்தி நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இவர் ஜெயிலில் இருந்ததால் சின்னராசுவும், கிருஷ்ணவேணியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற தைரியத்தில் கள்ளக்காதல் ஜோடி கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.

இருந்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சின்னராசு, கிருஷ்ணவேணியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதை அடுத்து புல்லட் ராஜாவும் அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய புல்லட் ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகாமையில் வைத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புல்லட் ராஜா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் ஜெயிலில் இருக்கும்போதே என் மனைவியுடன் சின்னராசு கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜாமினில் வந்த பின்னர் இருவரையும் கண்டித்து பார்த்தேன். ஆனால் என்னை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் கோவில் அருகாமையில் வைத்தும் அவர்களை கண்டித்தேன். அப்போதும் சின்னராசு என் பேச்சைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள புல்லட் ராஜாவை இன்று மாலைக்குள் திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News