உள்ளூர் செய்திகள் (District)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.49 அடியாக உயர்வு- பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு ஆய்வு

Published On 2022-07-24 04:43 GMT   |   Update On 2022-07-24 04:43 GMT
  • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உள்ளது.
  • நாளைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உள்ளது. நாளைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்னை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News