உள்ளூர் செய்திகள்

ஆம்பூரில் பைக் மீது லாரி மோதி அக்காள், தங்கை பலி

Published On 2022-09-15 06:18 GMT   |   Update On 2022-09-15 06:18 GMT
  • சாலையின் நடுவில் இருந்த தடுப்புகள் மீது மோதியதில் லாரியில் இருந்த கண்டெய்னர் சாலையில் விழுந்தது.
  • எதிரே வந்த தண்டபாணி பைக் மீது லாரி மோதியது.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள வீரன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி அனுராதா. தம்பதிக்கு ஜெயஸ்ரீ (வயது 17), வர்ஷா ஸ்ரீ (12) என 2 மகள்கள் இருந்தனர். இருவரும் ஆம்பூர் அருகே உள்ள புது கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ பிளஸ்-2, வர்ஷா ஸ்ரீ 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

மாணவிகள் இருவரும் பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை தாமதமாக வந்ததால் பள்ளி பஸ் சென்று விட்டது. இதையடுத்து தண்டபாணி தனது மகள்கள் இருவரையும் பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். ஆம்பூர் ஏ ஆர் தியேட்டர் அருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்புகள் மீது மோதியதில் லாரியில் இருந்த கண்டெய்னர் சாலையில் விழுந்தது. எதிரே வந்த தண்டபாணி பைக் மீது லாரி மோதியது. இதில் பைக் பின்னால் அமர்ந்து வந்த ஜெயஸ்ரீ வருஷா ஸ்ரீ இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தண்டபாணி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் இறந்த மாணவிகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேர் லாரியில் சிக்கி பலியான சம்பவம் ஆம்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News