உள்ளூர் செய்திகள்

கார் மரத்தில் மோதி நின்ற காட்சி.

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி விபத்து- வாலிபர் பலி

Published On 2023-05-15 04:50 GMT   |   Update On 2023-05-15 04:50 GMT
  • கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சென்று கொண்டு இருந்தது.
  • இரவு முழுவதும் டிரைவர் தூங்காமல் காரை ஓட்டி வந்தார். குமரன்குன்று அருகே வந்தபோது டிரைவர் திடீரென கண் அயர்ந்து விட்டார்.

மேட்டுப்பாளையம்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலக்குள்ளி அருகே உள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி ரஞ்சனி (30).

இவர்களது மகன்கள் ஜோசப் ஆப்ரகாம் (8) கேசா சாரல் (6). ராஜேஷின் சகோதரி சித்ரா (27). இவர்கள் 5 பேரும் கோடை விடுமுறையையொட்டி தங்களது காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். காரை ஓட்டுவதற்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பூவேந்திரன் (28) என்பவரை நியமனம் செய்தனர்.

அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் பாலூரில் இருந்து காரில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊட்டிக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் பூவேந்திரன் ஓட்டி வந்தார். முன் இருக்கையில் ராஜேஷ் அமர்ந்து இருந்தார். அவரது மனைவி, தங்கை மற்றும் மகன்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சென்று கொண்டு இருந்தது. இரவு முழுவதும் டிரைவர் தூங்காமல் காரை ஓட்டி வந்தார். குமரன்குன்று அருகே வந்தபோது டிரைவர் திடீரென கண் அயர்ந்து விட்டார். இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்இமைக்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் இருந்த ராஜேஷ் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் உள்பட அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷின் மனைவி ரஞ்சனி, அவரது தங்கை சித்ரா, மகன்கள் ஜோசப் ஆப்ரகாம், கேசா சாரல் மற்றும் டிரைவர் பூவேந்திரன் ஆகியோரை மீட்டனர். பின்னர் 5 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும் சிறுமுகை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் விபத்தில் இறந்த ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News