ஈரோடு இடையன்காட்டு வலசில் இன்று கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் என்ஜினும் சேதம் அடைந்தது.
- வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பில்லூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (39). இவர் நேற்று மாலை காரில் ஈரோடு இடையன்காட்டு வலசுக்கு வந்துள்ளார்.
அங்கு ஒரு விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் சங்கருடன் சந்தோஷ் குமாரும் நேற்றிரவு தங்கி இருந்தார். சங்கருக்கு இன்று வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதால் சந்தோஷ் குமார் காரில் வந்திருந்தார். காரை விடுதியின் வெளியே நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை காரை சந்தோஷ்குமார் இயக்க முயன்றார். ஆனால் கார் இயங்காததால் மெக்கானிக்குக்கு தகவல் சொல்லிவிட்டு நண்பருடன் சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது.
பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் என்ஜினும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த போது காரில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இடையன்காட்டு வலசு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.