உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகளை திருத்த தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் 21-ந்தேதி விசாரணை

Published On 2022-06-18 05:28 GMT   |   Update On 2022-06-18 06:52 GMT
  • வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுகிறது.
  • அதிமுக கட்சி விதிகளின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கூட்டும் அதிகாரங்கள் நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் ராம்குமார் ஆதித்தன். அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியின் மகன் கே.சி.பி. சுரேன். இவர்கள் இருவரும் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி நடந்தது.

அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் ஆகிய புதிய பதவிகளை உருவாக்கி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த இரு பதவிகளுக்கும் ஏற்கனவே இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்களை மாற்றி வழங்கப்பட்டது.

இவ்வாறு புதிய பதவிகளை உருவாக்கவோ, பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்களை மாற்றம் செய்யவோ கட்சியின் பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை.

இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தபோது அந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சிவில் வழக்கு தொடர்ந்தோம்.

இந்த நிலையில், வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுகிறது. அதிமுக கட்சி விதிகளின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கூட்டும் அதிகாரங்கள் நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டுதல், கட்சியின் ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடைவிதிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். கட்சியின் பொதுக்குழு தான் அவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி செயற்குழுவில் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை தேர்வு செய்ததற்கு தடை விதிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இருமுறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

Tags:    

Similar News