உள்ளூர் செய்திகள்

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகளிடம் 3-வது நாளாக விசாரணை: நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்

Published On 2023-02-27 03:35 GMT   |   Update On 2023-02-27 05:03 GMT
  • அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 6 பேரிடம் 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
  • 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

விழுப்புரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் பிஜி மோன், கோபிநாத், முத்து மாரி, சதீஷ், பூபாலன், அய்யப்பன், தாஸ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மனநலம் குன்றிய தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்தனர். இவர்களிடம் விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது

இவர்களில் முத்து மாரி, சதிஷ் ஆகியோருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை இன்று மனநலத்துறை தலைவர் டாக்டர் புகழேந்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ஜூபின் பேபி உள்பட 6 பேரிடம் இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூபின் பேபி உள்பட 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை முடிந்து 6 பேரும் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Tags:    

Similar News