உள்ளூர் செய்திகள்

சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு- கிலோ ரூ.32-க்கு விற்பனை

Published On 2023-03-05 05:06 GMT   |   Update On 2023-03-05 05:06 GMT
  • கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது.

சேலம்:

தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

Similar News