உள்ளூர் செய்திகள் (District)

தீபாவளி பண்டிகை- இரவில் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது- போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு

Published On 2022-10-19 10:33 GMT   |   Update On 2022-10-19 10:33 GMT
  • கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
  • தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிகள் வாங்க கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

சென்னையில் முக்கிய வர்த்தக மையமாக திகழும் தி.நகரில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதேபோல், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது.

கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தீபாவளி விற்பனைக்காக இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எந்தவித தொந்தரவும், செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீசுக்கு பிறப்பித்து உள்ள உத்தரவில், தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்' என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News