உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் பிரசாரம்

Published On 2023-02-08 07:05 GMT   |   Update On 2023-02-08 07:05 GMT
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
  • 13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கான அதிகார பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் வேட்பாளருடன் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 12-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. பிரேமலதா, விஜயபிரபாகர் பிரசாரம் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News