உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது- அமைச்சர் தகவல்

Published On 2023-11-22 08:08 GMT   |   Update On 2023-11-22 08:08 GMT
  • 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயது மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் 2 நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். 4 மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது.

இதற்கு அடுத்த படியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மருத்துவ கழிவு எரிப்பது சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்த கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழை, சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை நிரப்ப 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக ரூ.220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News