உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 2 பேருக்கு மூச்சு திணறல்

Published On 2023-02-18 08:30 GMT   |   Update On 2023-02-18 08:30 GMT
  • விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
  • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

போரூர்:

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் தனியார் பள்ளி அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் 2 பிளாக், 12 தளங்களுடன் மொத்தம் 134 வீடுகள் உள்ளது.

நேற்று இரவு 11 மணி அளவில் தரை தளத்தில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

மின்சார ஒயர்கள் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதால் தீ 12-வது தளம் வரை வேகமாக பரவியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக மாறியது. இதில் குடியிருப்பில் வசித்து வரும் வயதானவர்கள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு 7 ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மூச்சு திணறலால் அவதிப்பட்டவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்ட முதியவர் ராஜ்மோகன் (வயது 79), அவரது மனைவி நீலா ஆகிய இருவரும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Tags:    

Similar News