உள்ளூர் செய்திகள்

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதை படத்தில் காணலாம்.

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து- ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2023-02-27 09:25 GMT   |   Update On 2023-02-27 09:25 GMT
  • தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
  • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் நியூ வாவிபாளையம் ஜெய்ஸ்ரீநகர் பகுதியில் மகேஸ்வரன், பரமசிவம் ஆகியோருக்கு சொந்தமான பனியன் எலாஸ்டிக் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். மாலை 4.30 மணிக்கு நிறுவனத்தின் அருகில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தண்ணீரை எடுத்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தீ பனியன் எலாஸ்டிக் நிறுவனத்திற்கும் பரவியது. அந்த தீ சிறிது நேரத்தில் எலாஸ்டிக் நிறுவனம் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையில் திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களுடன் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து விட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு கட்டிடத்தை இடித்து உள்ளே சென்று தீயை அணைக்க போராடினர். இரவு 10 மணி ஆகியும் தீயை முழுவதுமாக அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த இறக்குமதி எந்திரங்கள், எலாஸ்டிக், பனியன் துணி, நூல் என மொத்தம் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News