உள்ளூர் செய்திகள் (District)

கண்டெய்னர் லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருட்கள்

Published On 2024-03-19 05:59 GMT   |   Update On 2024-03-19 05:59 GMT
  • தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
  • மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை:

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன்படி பணப் பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியாக ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ குழு என 3 குழுவினரும் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் முழுவதிலும் 70 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்குடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது காரில் இருந்த காளையார் கோவில் பகுதியை உடையப்பன் என்பவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாச்சியர் ஷாலினியிடம் ஒப்படைத்தனர்.


இதேபோன்று மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கடவூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனை யிட்டனர். அதில் பல ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள், சட்டைகள், டி-சர்ட்டுகள், பட்டாசுகள் ஆகியவை பெட்டி பெட்டியாக உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பொருட்களை ஒப்படைத்துசென்றனர்.

இதேபோல் மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயம் சிவகாசியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை மடக்கி அதில் முழுவதுமாக சோதனை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் 11 பெட்டிகளில் முழுவதுமாக பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.

லட்சக்கணக்கு மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினியின் அனுமதியுடன் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பட்டாசு பெட் டிகள் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்டமாக இந்த பட்டாசு பெட்டிகள் ஆந்திராவில் தேர்தல் காலத்தில் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டதா? யார் அனுப்பியது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவில் கட்டுகட்டாக ரொக்க பணம், கண்டெய்னர் லாரியில் பெட்டி பெட்டியாக பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணலாம்.

Tags:    

Similar News