உள்ளூர் செய்திகள்

ஆசனூர் வனப்பகுதியில் கனமழை- விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் மலைகிராம மக்கள் தவிப்பு

Published On 2023-05-19 04:27 GMT   |   Update On 2023-05-19 04:27 GMT
  • பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
  • சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தாளவாடி:

தாளவாடி அடுத்துள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 முதல் 5 மணி வரை குளியாடா, திம்பம், ஒசட்டி, தேவர்நத்தம், மாவள்ளம் மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் பலத்த மழையால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. இதேபோல் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் எரகனள்ளி, சிமிட்டள்ளி, ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழை பெய்தது.

இதேபோல் சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மலைகிராம மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். குழந்தைகளை வைத்து கொண்டு பெண்கள் கடும் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News