உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- 100க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2024-07-21 09:19 GMT   |   Update On 2024-07-21 09:19 GMT
  • இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது.
  • கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.

திருப்பூா்:

கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடத்தியதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது சிறுவர்கள் பலர் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.

இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.

Tags:    

Similar News