உள்ளூர் செய்திகள் (District)

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர் பயணம்-பெருங்களத்தூர், பூந்தமல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-10-02 09:30 GMT   |   Update On 2022-10-02 09:31 GMT
  • பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
  • கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி பகுதியில் நேற்று நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பூந்தமல்லி:

ஆயத பூஜைவிழா நாளை மறுநாள் (4-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

5-ந்தேதி விஜயதசமி விடுமுறை நாள் வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் நேற்று முதலே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பஸ், ரெயில்களில் டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பிவிட்டன.

பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை முதலே வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

இதனால் முக்கிய சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மழை நீர் கால்வாய்க்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்க ளில் வாகனங்கள் ஸ்தம்பித்து சென்றன.

குறிப்பாக கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி பகுதியில் நேற்று நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெருங்களத்தூரில் நேற்று மாலை 6 மணி முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக சென்றன. வெளியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் ஸ்தம்பித்தது.

இந்த போக்குவரத்து நெரிசல் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் நள்ளிரவு வரை நீடித்தது.

பூந்தமல்லியில் இருந்து விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருத்தணி, வேலூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வழக்கமாக சிறப்பு பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ஆனால் தற்போது மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்ட பணிகள் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை நடைபெற்று வருவதால் சிறப்பு பஸ்கள் பூந்தமல்லி பணிமனை அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

பஸ்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் சர்வீஸ் சாலையிலே வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன. இதனால் மாலை முதலே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேரம் செல்ல செல்ல வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட பகுதியில் போதிய நிழற் குடைகள், கழிவறை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு சுமார் ஒரு மணி வரை நீடித்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் செல்லமுடியாமல் தாமத மாக சென்றன. அப்பகுதியில் வந்த மற்ற வாகன ஓட்டிக ளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

இன்றும் அதிக அளவு பயணிகள் சொந்த ஊர்க ளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News