ஓசூர் விவசாயி கொலையில் 2 பேர் மீது வழக்கு
- கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவராமப்பா (51) விவசாயி. மேலும் இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில், பசுமாடுகள் தீவனத்திற்காக புற்களை அறுத்து காரில் ஏற்றி வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜுஜு வாடியில் உள்ள மயானம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், காரை வழிமறித்து, அவரை வெளியே இழுத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒசூர் சிப்காட் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிவராமப்பாவுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாபு என்கிற ராமகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதற்காக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது என்பது தெரியவந்தது.
தனது தந்தையை நிலத்தகராறு காரணமாக பாபு என்கிற ராம கிருஷ்ணன், நாராயணசாமி ஆகிய 2 பேரும் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவராம் மகன் மாதுகுமார் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.