உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

Published On 2023-06-27 06:39 GMT   |   Update On 2023-06-27 06:39 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
  • சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன.

நாமக்கல்:

கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும், கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

கனிமவள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழக முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எலச்சிபாளையம், பரமத்தி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள 50 கல்குவாரிகளில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் கனிமவள உதவி இயக்குனர் பூரணவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குவாரிகளில் இருந்து உரிமம் கேட்டு நேற்று யாரும் வரவில்லை என்றார்.

சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கல்குவாரிகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குவாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News