லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு எதிரொலி: செங்கோட்டை பகுதி பங்குகளில் பெட்ரோல் நிரப்பி செல்லும் கேரள வாகன ஓட்டிகள்
- கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல் ரூ. 6, டீசல் ரூ. 3 குறைவாக உள்ளது.
- தமிழக-கேரள எல்லையில் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வந்து பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
செங்கோட்டை:
கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா ரூ.2 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முதல் கேரளா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது.
இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.98-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.85 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.21 ஆகவும் உள்ளது.
கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல் ரூ. 6, டீசல் ரூ. 3 குறைவாக உள்ளது. இதனால் தமிழக-கேரள எல்லையில் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வந்து பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
அதன்படி தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு, எடமண், கழுதுருட்டி, தென்மலை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் அதிகாலை முதலே தென்காசி மாவட்டத்தின் எல்லை பகுதிகளான புளியரை, செங்கோட்டை, புதூர், கேசவபுரம், பிரானூர் பார்டர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பங்குகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.