கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதி கிராம உதவியாளர் பலி
- பெருவாயில் பகுதியில் சாலை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது40). கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை அவர் தனது தங்கையான புவனேஸ்வரி(32) மற்றும் அவரது மகள் சாருமதி(5) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
பெருவாயில் பகுதியில் சாலை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
புவனேஸ்வரி, அவரது மகள் சாருமதி ஆகியோரின் கால்கள் நசுங்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைவில் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.