எடப்பாடி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கு சாமி படத்தின் பின்புறம் வைத்துள்ள ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
- மேலும் அங்குள்ள சிறிய நகையை ஒன்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பீரோவை திறக்க முயற்சி செய்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கள்ளுகடை, காவான் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 48) இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலை அருகில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய் கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக, மாணவர்களை வெளிநாட்டு கல்விக்கு அனுப்பும் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு ஜெய் கணேஷ் குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு உணவு முடிந்து தூங்க சென்றனர். கீழ்த்தளத்தில் உள்ள பிரதான கதவை பூட்டிவிட்டு ஜெய்கணேஷ் முதல் மாடியின் வெளிப்புறத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உட்புறத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு சாமி படத்தின் பின்புறம் வைத்துள்ள ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் அங்குள்ள சிறிய நகையை ஒன்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பீரோவை திறக்க முயற்சி செய்தனர்.
அப்போது சத்தம் கேட்டு விழித்தெழுந்த விஜயலட்சுமி அங்கு முகமூடி அணிந்து மர்மநபர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். இதனை அடுத்து அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கொள்ளையர்கள் ஜெய்கணேஷ் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லகுட்டூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயி வீட்டினுள் நுழைய முயன்றனர்.
அங்கு இருந்தவர்கள், பருத்தியை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில் கொள்ளையர்களை கண்ட அவர்கள் சத்தம் போட்டு விரட்டி பிடிக்க முயற்சி செய்து உள்ளனர். இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இதுபற்றி பூலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் காவல் துறை உயர் அலுவலர்கள் முகாமிட்டு கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் பூலாம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பாறைக்காடு பகுதியில் உள்ள லாரி டிரைவர் வீட்டிலும், பில்லக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டிய நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் முகமூடி கொள்ளை சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.