ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
- ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது காய்ச்சல் பரவி வருவதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் இன்று காலை திடீரென பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொழிலாளர் வைப்புத் தொகை முறையாக கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் செவிலியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியர்கள் இல்லாததால் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.