கொடைக்கானலில் 4 மாதத்திற்கு பிறகு ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று
- கடந்த 4 மாதங்களாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படாத நிலையில் அப்சர்வேட்டரியை சேர்ந்த 55 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
- வானியல் ஆய்வு மையத்தை சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றார்.
கொடைக்கானல்:
சுற்றுலா நகரான கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதன் முறையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இங்கு 2000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர்.
கடந்த 4 மாதங்களாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படாத நிலையில் அப்சர்வேட்டரியை சேர்ந்த 55 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. வானியல் ஆய்வு மையத்தை சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் காரணமாக இவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர். அவரை தனிமைப்படுத்தி உள்ள மருத்துவத்துறையினர் அவருடன் தொடர்பில் இருந்த 8 பேர்களுக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கோடை சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.