உள்ளூர் செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளையடித்த பரோட்டா மாஸ்டர் கைது

Published On 2022-07-10 03:53 GMT   |   Update On 2022-07-10 03:53 GMT
  • சிகிச்சை முடிந்து நடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
  • மேலும் பரோட்டா மாஸ்டர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளதும் தெரியவந்தது.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 50). இவர் திருச்செங்கோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் உடல்நிலை கோளாறு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

அப்போது தனது ஓட்டலில் வேலை பார்த்த பரோட்டா மாஸ்டர் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (35) என்பவரிடம் ஓட்டலை கவனித்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

பின்னர் சிகிச்சை முடிந்து நடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் பரோட்டா மாஸ்டர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளதும் தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விஜயகுமார் (35) தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், விரைந்து சென்று பேச்சிப்பாறையில் பதுங்கி இருந்த விஜயகுமாரிடம் இருந்து 12 பவுன் நகைகள் மீட்டனர். பின்னர் போலீசார், அவரை கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News