உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷம் கொடுத்ததால் உடல்நலம் பாதிப்பு- கணவர் புகாரின் பேரில் புதுப்பெண் மீது போலீசார் வழக்கு

Published On 2022-11-14 07:37 GMT   |   Update On 2022-11-14 07:37 GMT
  • வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

இரணியல்:

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 32), கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுஜா. இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென இரவில் வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள வடிவேல் முருகன், தனது மனைவி மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் காதல் இருந்ததாகவும் தற்போது அவருடன் சேர்ந்து தனக்கு மெல்லக் கொல்லும் விஷத்தை மனைவி கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வடிவேல் முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அந்த வீடியோவில் வடிவேல் முருகன் தனது மனைவியின் செல்போனை தற்செயலாக பார்த்த போது தான் கொலை சதி பற்றி தெரிய வந்ததாகவும் தனது மனைவி கள்ளக்காதலனுடன் உரையாடிய வாட்ஸ்அப் ஆதாரம் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த உண்மை தனக்கு சரியான நேரத்தில் தெரியாமல் இருந்தால், தான் கொல்லப்பட்டு இருப்பேன் என்றும், அல்லது விபத்தில் சிக்கி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

தனது கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலனுடன் சுஜா பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வடிவேல்முருகன் போலீசிலும் புகார் அளித்தார். தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் காதலன், மாணவர் மெல்லக் கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டதாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் தற்போது மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News