விஷ ஊசி போட்டு 300 பேர் கொலை?- அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் போலீசார் விசாரணை
- முதியோர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும் பராமரிப்பதற்குரிய ஆட்கள் இல்லாததும் கருணை கொலைக்கு காரணமாய் அமைகிறது.
- படுத்த படுக்கையாக உள்ளவர்களை கவனிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை கருணை கொலை செய்யும் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்து வருபவர் மோகன்ராஜ் (வயது 50).
இவர் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு பூச்சி மருந்து கொண்ட ஊசியை செலுத்தி கருணை கொலை செய்வதாகவும், இதற்காக அவர்களது உறவினர்களிடம் ரூ.5000 வரை பணம் பெறுவதாகவும், கடந்த 15 வருடமாக இது போல் 300 பேரை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதை அறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் கூறுகையில், பணம் பெற்றுக்கொண்டு கருணை கொலை செய்வதாக பிணவறை தற்காலிக ஊழியர் மோகன்ராஜ் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேறு யாரும் அவர் மீது புகார் கொடுக்கவில்லை. அவர் கருணை கொலை செய்தது உண்மை என விசாரணையில் தெரியவந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நேற்று முழுவதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு அவரை அழைத்துள்ளோம்.
அவர் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஒரு பொருளை வைத்திருந்ததாக, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கூறுகையில், கிராமப் புறங்களில் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களை கவனிக்க முடியாததால், அவர்களது குடும்பத்தினரே கருணை கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
முதியோர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும் பராமரிப்பதற்குரிய ஆட்கள் இல்லாததும் இதற்கு காரணமாய் அமைகிறது. படுத்த படுக்கையாக உள்ளவர்களை கவனிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை கருணை கொலை செய்யும் அளவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்காக மோகன்ராஜ் போன்ற சிலரை பயன்படுத்தி சத்தம் இல்லாமல் கருணைக்கொலையை அரங்கேற்றி வருகிறார்கள்.
இதேபோல போலி மருத்துவர்கள் சிலரும் பெரிய தொகையை பெற்றுக்கொண்டு கருணைக் கொலையை அரங்கேற்றி வருகிறார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபாளையத்தில் பிணவறை ஊழியர் ஒருவரே 300-க்கும் மேற்பட்டோரை கருணை கொலை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதும், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.