மகனின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த தொழிலாளி- போலீசார் வலைவீச்சு
- பேச்சிமுத்து தந்தையிடம் மது அருந்த பணம் இல்லை என்று கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
- பின்னர் முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு, வடக்குத் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 20). டிரைவராக உள்ளார். இவரது தந்தை முருகன் மது அருந்தும் பழக்கம் உடையவர் ஆவார்.
அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் அவர் தனது மனைவி சண்முகத்தாயிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதைப்பார்த்த பேச்சிமுத்து தந்தையிடம் மது அருந்த பணம் இல்லை என்று கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
அதன் பின் அதிகாலையில் முருகன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பேச்சிமுத்து, அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோரது மோட்டார் சைக்கிள்கள் மீது துணிகளை போட்டு தீ வைத்தார். இதில் மோட்டார் சைக்கிள்கள் பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்த முருகன் வெளியே வந்து பார்த்த போது, முருகன் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்கள் மீது பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அவை முழுவதும் எரிந்து நாசமானது. தீயில் கருகிய மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து பேச்சிமுத்து களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, முருகனை தேடி வருகின்றனர்.