திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை
- கொடைக்கானலிலும், மலைகிராமங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- மலை கிராமங்களில் பல மணி நேரம் ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் நேற்று 2வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
திண்டுக்கல் நகரில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை பின்னர் விடிய விடிய சாரல் மழையாக பெய்தவண்ணம் இருந்தது. பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் தடை பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
காலையில் பள்ளிக்கு செல்லும் சமயத்திலும், மாலையில் வீடு திரும்பும் சமயங்களிலும் மழை பெய்து வருவதால் மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கனமழை இல்லாமல் தொடர்ந்து சாரல் மழையாகவே பெய்து வருவதால் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சாலைப்பணியாளர்கள் அங்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
கொடைக்கானலிலும், மலைகிராமங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல கிராமங்கள் இருளில் மூழ்கி காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி மரங்கள் முறிந்து விழுவதும், மின் வயர்கள் அறுந்து கிடப்பதும் நடந்து வருகின்றன.
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெரும்பாறை, கே.சி.பட்டி, மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைச்சாலையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உள்ள இடங்களில் பாறைகள் உருண்டு கிடக்கின்றன. இதனால் இருசக்கர வானகங்களில் இரவு நேரங்களில் மலைச்சாலையில் பயணம் செய்ய அச்சம் அடைந்து வருகின்றனர். தடியன்குடிசை அருகே இன்று காலையிலும் பாறைகள் உருண்டு விழுந்ததால் அந்த சாலையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. எனவே மலைக்காலங்களில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுவதை தடுக்கவும், விழுந்த பாறைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மலை கிராமங்களில் பல மணி நேரம் ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையிலேயே தற்போது பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடப்பதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 141 மி.மீ.மழை அளவு பதிவான நிலையில் நேற்று 2-வது நாளாக 60 மி.மீ. மழை அளவு பதிவானது. திண்டுக்கல் 24, காமாட்சிபுரம் 4, நத்தம் 2, நிலக்கோட்டை 6, சத்திரப்பட்டி 5.20, வேடசந்தூர் 6, பழனி 2, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 4, பிரையண்ட் பூங்கா 5 மி.மீ. மழை அளவு பதிவானது.