உள்ளூர் செய்திகள்

எடப்பாடி மீது செல்போன் வீச்சு: ரவீந்திரநாத் கண்டனம்

Published On 2024-10-02 09:27 GMT   |   Update On 2024-10-02 09:27 GMT
  • அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
  • இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல்:

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனை எடப்பாடி பழனிசாமி மீது வீசினார். அந்த செல்போன் இ.பி.எஸ். காதில் பட்டு கீழே விழுந்தது. இதனால் அவர் திடீரென பதட்டமடைந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தேனி முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரீகமான செயல். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும், சீர்திருத்தமும் குறைவாக கூடாது. வன்முறையை தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தலைவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் மிகுந்த கவனமுடனும், விழிப்புடணும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு துரோகம் இழைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியும் கூறி வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என அன்போடு அழைத்து ரவீந்திரநாத் பதிவிட்டு இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News